சகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் அதனை ப்ரயோகிகும் முறைகளும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களும்..

அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம்.

அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம்.

எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.

இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அக்ஷரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள். அந்த குறிப்பிட்ட அக்ஷரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது. அந்த சக்திக்கு அடையாளம் தருவதற்காக அதற்கு பெயர்களும் வடிவமும் தரப்பட்டன.

உதாரணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது. த்ரியம்பகம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் முன் வைக்கிறார்கள். முக்கண் என்பார்கள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி. இதுவே யோகநிலையில் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை அதாவது அக்னி கலை எனப்படுகிறது.

மூன்று சக்திகளையும் (இசஞ்சா சக்தி, க்ரியா சக்தி, ஜ்ஞான சக்தி) உடையவர் என்பதால் த்ரியம்பகன் . சத்துவம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களைக் கொண்டு ஜீவனில் நிலைப்பதால் முக்குணங்களை முக்கண்ணாக உடையவர் என்பர் சிலர்.

வேதாந்தம் சித்தம், அஹங்காரம், புத்தி மூன்றையும் முக்கண்ணாகக் குறிப்பிடுகின்றது. இப்படி பல் வேறு கருத்துக்களையும் கூர்ந்து கவனித்தால், எல்லா கருத்துக்களும் யோக நிலையில் மேன்மையடையும் விஷயங்களைக் குறித்தே சொல்லப்பட்டிருப்பது புரியும். ம்ருத்யு என்றால் அஞ்ஞானம்.

அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்ஷிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம்.

இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது.

எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.
இந்த மந்திரமானது

”த்ர்யம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருக மிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீயமா அம்ருதாத் ||”

பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள். அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும்.

இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.

த்ர்யம்பகம் – பூதசக்தி ஸஹித பவேச போதகர் – மூலாதாரச் சக்கரம்.
யஜாமஹே – சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் – சுவாதிஷ்டானம்.
ஸுகந்திம் – விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் – மணிபூரகம்.
புஷ்டிவர்த்தனம் – வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் – அநாஹதம்.
உருவாருகமிவ – உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் – விசுத்தி.
பந்தனாத் – மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் – ஆக்ஞா.
ம்ருத்யோர்முக்ஷீய – பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் – சகஸ்ராரம்.
மாஅம்ருதாத் – ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் – சகஸ்ராரம்.

சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம். இந்த மந்திரங்களை கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட உச்சரிக்கலாம். பலன் நிச்சயம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் மனமும் வசப்படுவதால் எளிதில் காரியம் சித்தியாகும். இந்த விளக்கங்களெல்லாம் அறிவைப் பேரறிவு நிலைக்குக் கொண்டு செல்ல முனைபவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll

*மந்திரத்தின் அர்த்தம்*
*************************

| ஓம் | பிரணவ மந்திரம் ஆகும்.

| த்ர்யம்பகம் | த்ரி என்றால் மூன்று, அம்பகம் என்றால் கண். முக்கண் என்பதே இதன் பொருளாகும்.

| யஜாமஹே | என்றால் நாங்கள் அன்போடு வணங்குகிறோம் எனப் பொருள்படும்.

| ஸுகந்திம் | என்றால் நறுமணம் வீசுகின்ற எனப் பொருள்படும்.

| புஷ்டி வர்தனம் | என்றால் எக்குறையும் இல்லாத, நிறைவான, போதுமான வாழ்க்கையை எப்போதும் அளிப்பவர் சிவபெருமான் எனப் பொருள்படும். மேலும், நோயில்லாத ஆரோக்யமான வாழ்க்கையை தந்து மனவலிமையையும் உடல் பலத்தையும் அதிகரிக்க வல்லவர் சிவபெருமான். நம் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதே சிவபெருமான்.

| உர்வாருகமிவ | என்றால் உயிரைக் கொல்லக் கூடிய கொடிய நோய்களாக இருந்தாலும், உடலை வறுத்தக் கூடிய நோய்களாக இருந்தாலும், எவ்வகையான நோய்களாக இருந்தாலும் அவற்றை நீக்கி எங்களைக் காத்து அருள் புரியவேண்டும் இறைவா எனப் பொருள்படும்.

| பந்தனான் | என்றால் பந்தங்களிலிருந்து எனப் பொருள்படும். இதை நாம் அடுத்த வரியோடு சேர்த்துச் செப்பித்தால் அர்த்தமாகும்.

| ம்ர்த்யோர் முக்ஷீய | என்றால் மரணங்களிலிருந்து விடுதலை அடைய செய்யுங்கள் எனப் பொருள்படும். முதலில் நோய்களை நீக்க வேண்டினோம். இப்போது மரண பந்தங்களில் இருந்து நம்மைக் காத்து, மரணமே நேராமல் விடுதலை தாருங்கள் என வேண்டுகிறோம். இதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு.
‘பந்தனான் ம்ர்த்யோர் முக்ஷீய’ என்றால் இறப்பு என்பது நிச்சயம். ஒருவேளை இறந்துவிட்டால், இனி நாங்கள் பிறக்கவேண்டாம். மீண்டும் பிறந்து துன்பப்பட்டு இறக்கவேண்டாம். எங்களுக்கு மோக்ஷம் அளியுங்கள் இறைவா எனப் பொருள்படும்.

| மாம்ர்தாத் | என்றால் எங்களை மரணத்தில் இருந்து காத்து, மரணமே இல்லாதவர்களாய் செய்யுங்கள் எனப் பொருள்படும்; இறந்தாலும் இறப்பே இல்லாதவர்களாக இருக்க அருள்புரியுங்கள் இறைவா எனவும் பொருள்படும்.

முன்னதாக, நாம் இனி பிறப்பே வேண்டாம், எங்களுக்கு மோக்ஷம் தாருங்கள் என வேண்டினோம். இப்போது, இறந்தாலும், மோக்ஷம் பெற்று என்றுமே அழியாதவர்களாக உங்களோடு (இறைவனோடு) இருக்க அருள்புரியுங்கள் என வேண்டுகிறோம்.

____________________________

*சுருக்கமான அர்த்தம் –*
*************************

ஓம். நாங்கள் முக்கண்ணுடைய இறைவனை அன்போடு வேண்டுகிறோம். உங்களின் திருவருளால் எங்களின் வாழ்வு என்றுமே எந்த குறைகளும் இல்லாமல் நறுமணம் வீசுகின்றது. எங்களை நோய்களில் இருந்து காத்து, மரணப்பிடியில் இருந்து மீட்டு அருள்புரியுங்கள், இறைவா. இறப்பு நிச்சயம் என்றால், எங்களுக்கு மோக்ஷம் தந்து என்றுமே உங்களோடு இணைந்திருக்க அருள்செய்யுங்கள்.
____________________________

*மந்திரத்தின் பொருள்:-*
*************************

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

*விளக்கவுரை:-*
***************

ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கு
ம் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.

சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது.

நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன.
வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.

மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது? அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது.

வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.

இறவாமை என்றால் என்ன? பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது
. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது.

இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.
எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை.
ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.

மந்திரம் செப்பும் ஒழுக்கநெறி
இம்மந்திரத்தை உடலில் திருநீறு இட்டுக்கொண்டு, ருத்ராட்சை மாலை அணிந்துகொண்டு செப்பிக்கலாம். (இம்மந்திரத்தை சரியாக உச்சரித்தால்) இம்மந்திரத்தால் எழும் சக்தி, நமக்கு புதிய தெம்பை அளித்து மனத்திற்கு தைரியத்தை அளிக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மந்திரத்தைச் செப்புவது அவர்களின் மனதிற்கு ஒரு தெம்பை தரும். மேலும், சிவபெருமானின் அருளால் அவர்களுக்கு நல்பேறு கிட்டும்.

எப்படி காயத்ரி மந்திரம் மனத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட நம்மை தயார்ப்படுத்துகிறதோ, அதுபோல மஹாம்ரித்யுஞ்சாய மந்திரம் நம் உள்ளத்திலும் உடலிலும் இருக்கும் பிணிகளை நீக்க துணைபுரியும்.

++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
+++++++++++++

நமது உடம்பில் சிரசு (தலை) மேலானது. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அதற்கு மேல் இருப்பது சிகை.சிகைக்கு மேல் ஒன்றும் இல்லை. நமது சைவ சாத்திரத்தில் மந்திரங்கள் 11
1,ஒம் ஈசானாய நமஹ
2.ஒம் தத்புருஷாய நமஹ
3,ஓம் அகோரா ய நமஹ
4,ஒம் வாமதேவா ய நமஹ
5,ஒம் சத்யோஜாதா ய நமஹ
6,ஓம் ஹ்ருதாய நமஹ
7,ஒம் சிரசே நமஹ
8,ஒம் சிகாயை நமஹ
9,ஓம் கவசாய நமஹ
10,ஒம் நேத்ரோப் யோ நமஹ
11,ஒம் அஸ்த்ராய நமஹ
இதில் 8 வது மந்திரம் சிகாயை நமஹ . எட்டாம் திருமுறையாக
சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்திற்கு மேல் சிறந்த நூல் இல்லை முதல் ஐந்து மந்திரமும் பஞ்சப் பிரம மந்திரம் . அடுத்த ஆறும் சடங்க மந்திரம் .இந்த 5+ 6 சேர்ந்துசம்மிதா மந்திரம் எனப்படும். கல்லை கனியாக்கும் திருவாசகத்தை கலந்து பாடினால் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டா இன்பம் அருளி முக்தி நெறி அளிக்கும்.

Posted in மட்றவை and tagged .

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published.