நல்லதே நினைப்போம..
நன்மையே பெறுவோம்..
கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!
அந்தக் கதை இதோ:
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்..
“மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்!
சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!
நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்,
ஆனால் யாரும் வாங்குநடக்கட்டும்டையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!
அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்!
அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது!
இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார்..
“இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்..
நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்…
எனவே,
நல்லதையே தேடுவோம்…
நல்லதையே சிந்திப்போம்…
நல்லதே நடக்கட்டும்