சந்திராஷ்டமம் என்றால் என்ன என்ன பண்ணும் சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?


Warning: Undefined array key "icon_animation" in /var/www/vhosts/mbarchagar.com/public_html/wp-content/plugins/wp-all-in-one-social/includes/public-class.php on line 106

*🔯சந்திராஷ்டமம் என்றால் என்ன பண்ணும்🔯சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?*

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்?

எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது.

சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம்.

*🔯இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.*

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.

ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும்.

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை.

இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.

சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம்.

சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது.

அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும்.

இதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.
சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள்.

மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.

சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம்.

ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

*🔯சந்திரன் இருக்கும் இடம்*

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும்.

இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது.

அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது.

நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும்.

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு.

பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம்.
நான்காம் ராசி:பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம்.

ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி.

ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல்.

ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம்.

இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள்.

பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம்.
பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

*உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.*

அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

*🔯பிறந்த நட்சத்திரம் – சந்திராஷ்டம நட்சத்திரம்*

அஸ்வினி – அனுஷம்
பரணி – கேட்டை
கிருத்திகை – மூலம்
ரோகிணி – பூராடம்
மிருகசீரிஷம் – உத்திராடம்
திருவாதிரை – திருவோணம்
புனர் பூசம் – அவிட்டம்
பூசம் – சதயம்
ஆயில்யம் – பூரட்டாதி
மகம் – உத்திரட்டாதி
பூரம் – ரேவதி
உத்திரம் – அஸ்வினி
அஸ்தம் – பரணி
சித்திரை – கிருத்திகை
சுவாதி – ரோகிணி
விசாகம் – மிருகசீரிஷம்
அனுஷம் – திருவாதிரை
கேட்டை – புனர்பூசம்
மூலம் – பூசம்
பூராடம் – ஆயில்யம்
உத்திராடம் – மகம்
திருவோணம் – பூரம்
அவிட்டம் – உத்திரம்
சதயம் – அஸ்தம்
பூரட்டாதி – சித்திரை
உத்திரட்டாதி – சுவாதி
ரேவதி – விசாகம்.
⚜⚜⚜⚜

*ஓம் ஆதிசித்த அகஸ்தீஸாய நமோ நமோ:*

*ஈஸ்வரோ ரக்ஷது!!!*

*ஸ்ரீ மாத்ரே நம:*

Posted in மட்றவை.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *