கோவை – ஈச்சனாரி
பொழுது புலரும் முன்னரே திறக்கப்படுகின்றன திருக்கோயில் கதவுகள். சூரியனின் ஒளிக்கதிர்கள் தோன்றுமுன்னே, மங்கல வாத்திய முழக்கத்துடன் துவங்கும் கணபதி ஹோமம். ஹோமம் நிறைவுற்று, யாக கலசத்து நீரால் மூலவர் விநாயகருக்கு புனித நீராட்டு, புஷ்ப அலங்காரம், ஆராதனை, நைவேத்யம், உபசாரங்கள்… நாள் முழுதும் திரண்டுவரும் பக்தர்கள் தடையின்றி கோவை மாநகர முதல்வனை தரிசித்திடும் வகையில் காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் அற்புதம். இந்த வசதி, செல்வச் சிறப்பு பெற்ற கோவை மாநகரின் எல்லையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில்தான் கிடைக்கிறது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் அது. கோவை மாநகருக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பதற்காகவே உருவானவர் இந்த விநாயகர்.
ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட ஆஜானுபாகுவான அழகிய விநாயகர் சிலையை, மாட்டு வண்டியில் ஏற்றி, மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். வரும் வழியில் ஈச்சனாரி என்ற இந்த இடத்தை அடைந்தபோது வண்டியின் அச்சு முறிந்து, சிலை தரையில் இறக்கப்பட்டது. அச்சை சரி செய்து மீண்டும் சிலையை வண்டியில் ஏற்றிட மேற்கண்ட முயற்சிகள் அத்தனையும் தோல்வியுற்றன. எனவே வித்தகன் திரும்பிய அந்த இடத்திலேயே, கோவை மக்களின் தென்திசைக் காவலனாக, விநாயகப் பெருமானுக்கு அழகியதோர் கோயில் உருவானது. 1977ல் முதல் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது.
சாலையில் அதிவேகமாகச் செல்லும் அத்தனை வண்டிகளும் ஈச்சனாரியை அடைந்ததும் ஒரு கணம் வண்டியை நிறுத்தி விநாயகரின் கம்பீரமான தோற்றத்தைத் தரிசித்து மனநிறைவோடு பயணத்தைத் தொடர்வதைக் காணலாம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே தங்கத்தேரில் திருஉலாவரும் ஒரே விநாயகர் திருக்கோயில் என்ற சிறப்பையும் பெற்றது, இந்த ஈச்சனாரி விநாயகர் கோயில்தான். ஆண்டு முழுவதும் 365 நாட்களிலும் உபயதாரர்களாக, பக்தர்கள் கட்டளையாக, காலையில் கணபதி ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் நாள்தோறும், பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலாக தங்கரதம் இழுப்பதும் மதியம், திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயத்தின் அருட்பிரசாதமாக அன்னதானம் நடைபெறுவதும், ஏழை மாணவர்களுக்கான கருணை இல்லமும், நலிவுற்ற பிரிவினருக்கான இலவசத் திருமணத் திட்டமும் செயல்படுத்தப்படும் அரிய சிறப்புக்களையும் பெற்றுள்ளது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில்.
மூன்று நிலை ராஜகோபுரம் அழகுக்கு அழகு சேர்க்கிறது. உள்ளே பெரியதொரு பிராகாரம். அதன் நடுவிலே அமைந்துள்ள கருவறையில் உயர்ந்த பீடத்தில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறார் விநாயகர். பிராகாரத்துச் சுவர்களில், விநாயகர் புராணம் ஓவியங்களாக மிளிர்கின்றன. ஈச்சனாரி விநாயகரின் பேரழகினைச் சற்று ரசித்திடுவோம். ஆறடி உயரம், மூன்றடி அகலம், அமர்ந்த கோலம். பெருவயிற்றைச் சுற்றிய நாகாபரணமும் கழுத்தில் உருத்திராட்ச மாலையுமாக ஐந்தடி உயரத்தினராக அருள்பாலிக்கிறார். வலதுகாலை பீடத்தில் வைத்தபடியும் இடதுகால் நம்மை நோக்கியவாறும் அமைந்துள்ளன. வலதுகரத்தில் உடைந்த தந்தமும் இடதுகரத்தில் மோதகமும் மேற்கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியபடி காட்சி தருகிறார் விநாயகர். காலையிலும் மாலையிலும் திருமஞ்சனம் செய்விக்கப்படும்போது பேரழகனின் எழில் திருமேனியை கண்குளிரத் தரிசிக்கலாம்.
காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்திடும் விநாயகப் பெருமானின் திருஉருவம் பல அரிய தத்துவங்களை உள்ளடக்கியதாகும். யானை முகம், மூன்று கண்கள், இரண்டு செவிகள், ஐந்து கரங்கள், பெரிய வயிறு, சிறிய வாகனம், குறுகிய திருவடிகள் அத்தனையும் அர்த்தம் பொருந்தியவையே. யானை முகம் ஒம்கார வடிவம் என்பதை விளக்குவதாகும். ஐந்து கரங்களும் பஞ்ச கிருத்தியத்தை (பிரபஞ்ச இயக்கமான ஐந்து தொழில்கள்) செய்யும் ஆற்றலைக் குறிப்பன. முகத்திலுள்ள கண்கள், சூரியன், சந்திரன் மற்றும் அக்னியை உணர்த்துவதாகும். விசாலமான இருசெவிகள் ஆன்மாக்களை காப்பவை. பெரிய வயிறு, அண்டங்கள் அனைத்தையுமே தன்னகத்தே கொண்டதைக் காட்டுவதாக உள்ளது.
அசுவினி முதல் ரேவதி வரையில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சிறப்பு அலங்காரங்களோடு, ஈச்சனாரி விநாயகப் பெருமான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அந்தந்த நட்சத்திரக்காரர்கள், அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மனநிறைவு பெறுகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி பத்து நாட்கள் பெருவிழா நடைபெறும்போது, ஆன்மிக, கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுவது கண்களுக்கும் கருத்துக்கும் ஆன்மிக பிரசாதமாகும். தூய்மை மற்றும் பக்திச் சூழலுடனான பராமரிப்புக்கும் முதலிடம் தரப்படுகிறது இங்கே. கோயமுத்தூருக்கு தெற்கே பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 9வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி. நெடுஞ் சாலையையொட்டியே, கிழக்கு நோக்கியபடி கோயில் அமைந்துள்ளது.