காரடையான்_நோன்பு

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு.

மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர்.

இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள்.

இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள்.

அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார்.

அதனால், காட்டில் மகனுடன் வசித்தார்.

பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான்.

அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி.

மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள்.

கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது.

அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை.

அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான்.

அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார்.

சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள்.

தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.

அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன்.

நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.

இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.

சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும்.

ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.

எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.

எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே!

அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி.

எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.

மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

விரதமுறை:

விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும்.

அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.

நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

பலன்:

காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

Posted in மட்றவை.

அனைவருக்கும் வணக்கம்
(குறிப்பு):-
இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..
வலைத்தளத்தின் உரிமையாளர் .
பா.மணிகண்டன் சிவம்
email id:[email protected]
[email protected]
Whatsapp no :- +91-9710054086
+60-146845002

"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *