ஆன்மா ஓர் கண்ணோட்டம்

#ஆன்மா_என்றால்_என்ன?

#அதன்_வேலைதான்_என்ன? அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*

????????????????

முதலில் ஆன்மா என்னவென்று நாம் அறிந்தால் தான் அதன்வேலையை நாம் உணர முடியும்.

பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் தான் ஆன்மா அமைந்திருக்கும் பிறப்பெடுக்காத மற்றும் இனி பிறப்பெடுக்க இருக்கும் பல கோடான கோடி ஜீவன்களுக்கும் துணையாகிநிற்கின்றது. நாம் படித்து , கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும் ,ஞானிகளும் , முனிவர்களும் , புத்தர் முதல் இன்றைய சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும் , ஆன்மாவே இறைவனின் சொரூபம் என்றும் , உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆன்மவடிவே என்றெல்லாம் கண்டுணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.

#இந்த_ஆன்மாவின்_பணி_தான்_என்ன
என்று நாம் சிந்தித்ததுன்டா? அல்லவே!?

ஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா ? பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா ? அதுதான் ஆறாம் அறிவா ? ஆன்மா என்பதுதான் உயிரா ? அது மனிதரை ஆள்கின்றதா ? என்பது போன்ற பல கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுந்து கொண்டே உள்ளதல்லவா!!?

உண்மையில் ஆன்மா என்பது , மனிதனை ஆள்வதோ , இயக்குவதோ , வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோ இல்லை .அப்படியென்றால் பின் என்ன தானய்யா ?
மனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ ,தோல்வியோ என்றுமே காண முடியாது.

மனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும் ,அவனின் கேள்வி ஞானமும் தான் . மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்படாது.
ஆம்!
ஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை , ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது , ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது. நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை , ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.

அப்படியானால் என்னதான் இந்த ஆன்மா என்பது ?
ஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.

“நமது ஒவ்வொரு அசைவையும் கூர் மையாக கவனித்து , நமது சொல்லோ, செயலோ , கவனமோ , சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக உரத்த/ பலவீனமான குரலில் நம்மை அது எச்சரிக்குமே ஒரு முனகல் குரலில் ஒலிக்கும் ஞாபகம் இருக்கிறதா ? அதுதான் நமது ஆன்மாவின் குரல்”

ஆம் !!
“மிரட்டும் தொனி இல்லாமல் கெஞ்சலிலுடன் மெதுவாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான் ”

“யேய் ..! நீ..
சாதிக்க பிறந்தவன் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல்தான்.”

“வெற்றியின் வித்தான நீ , தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்குமே!அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மாதான்.”

“நாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.”

“ஆன்மீக வாசல் திறந்திருக்க , அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்புகுரல்தான்.”

” இந்த லெளகீக வாழ்வில் மட்டுமல்ல நமது இறப்பு/ பிறப்பிலாவது நம்மை இறையுணர்வில் ஆழ்ந்திட வேண்டும் என்றுநம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.”

“ஆன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி , முற்பிறப்பில் யாராக இருந்து வாழ்ந்து இறந்தோம் , இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளிதான்.!”

“தவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை ! மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம் காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மாதான்.”

“மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் திருப்பாதம் நாட வேண்டும் என காதலாகி ,கசிந்து மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம்புது பூவை கையிலெடுப்பதுபோல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு உடன் வரும் துணை யார் தெரியுமா ? நமது ஆன்மாதான்.”
இது தான் ஆன்மாவின் புனிதப்பணி!!!!!

ஆம் ….! நமது ஆன்மா சொல்வதை கேட்ப்போம் , அன்பு வழி செல்லுவோம் .இறைப்
பேரானந்த அலையில் ஆடி மகிழ்ந்து,பிறவி பெருங்கடலை கடந்து பேரின்பஅற்புதங்களை உணர்வோம் வாரீர் ! வாரீர்!!

நன்றி….

Posted in மட்றவை.

Sundaramoorthy Kanthankudil Natesan

View posts by Sundaramoorthy Kanthankudil Natesan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *